ஒருதலைராகம்

இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான்
உன்னை நான் ஒருதலையாகவே
நேசித்துக்கொண்டிருக்கமுடியும்......

அந்தி மாலையிலும்.....
அர்த்தஜாம வேளையிலும்......
நீர்த்த அதிகாலையிலும்........

எத்தனை முறை
உன்னைப் பார்த்திருப்பேன்.
எத்தனை முறை
உனக்குள்ளே முகம் புதைத்து
உன்னை ஸ்பரிசித்திருப்பேன்.
ஆனால் நீயோ
அருகிலே இருந்தும்
விலகியே இருக்கின்றாயே?

இப்பொழுது நானும் அப்படித்தான்.

எல்லாக் காதலரும் சொல்வதைப்போல
எந்தப் புத்தகத்தைப் புரட்டினாலும்,
எந்த நோட்டுக்களைப் புரட்டினாலும்
பக்கமெங்கும் உன் முகம்தான்

எனது விரல்களும்கூட
பேனாவைத் தழுவும் நேரங்களில்
எழுத நினைப்பதெல்லாம் உன்னையே.

எத்தனை முறை படித்தாலும்
பொருளே புரியமுடியாத
சங்க காலக் கவிதைபோல நீ
எப்படியாயினும் உன்னை அடைந்தே
தீருவதெஎன்ற ஆதங்கத்தில் நான்.

எனக்கு தோல்விகள் சகஜம்தான்
அதற்காக நீயுமா
என்னை ஏமாற்றிவிடப் பார்க்கின்றாய்.
நான் உன்னை ஒருபோதும்
தோற்கடிக்க நினைத்ததில்லை.
வெற்றிகொள்ளவே விரும்புகிறேன்.

உன்னோடு எனக்கு
கட்டாயக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு
இற்றோடு ஆண்டுகள் ஐந்து கடந்துவிட்டது.
உன்னை நான் நேசிக்கத் தொடங்கியது
என்னிடமிருந்து பருவங்கள் இரண்டு
பறிபோன பின்புதான்.

தாமதமாய் வந்தாலுமிது
தரமான காதல்.
உன் பார்வைகள் என்னைப்
பற்றிக்கொள்ளும் வரை
உன்னைப் பற்றியே
நினைந்துருகும்.

தெருவிலே போவோர்
உன்னைப் ‘பற்றிப்’
பேசிச்செல்லும்போதெல்லாம்
நான் உன்னோடு பேசிச் சிரிப்பதெல்லாம்
எப்போதென்று எனக்குள்ளும் ஓர் ஆதங்கம்

ஆதலால் சொல் அன்பே
என் மனவீட்டில் நீ குடிபுகுந்து
என் நாவினில் நின்று ஆட்சி புரியும்
அந்த நாள் எதுவென்று
சொல் ‘ஆங்கிலமே’ சொல்....

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement