இலந்தைப்பழம்

இலந்தை பழம்.

வட இந்திய மாநிலங்களில் விளையும் பழம் சற்று நீளமாகவும் பெரிதாகவும் இருக்கும். சதைப்பற்றும் அதிகமாக இருக்கும்.


தமிழ்நாட்டில் சிறு நெல்லிக்காயளவிற்கு இருக்கும். தள்ளு வண்டியில் வைத்து பள்ளிக்கூடங்களுக்கருகில் விற்கப்படும். உப்பு, மிளகாய்பொடி தூவி பொட்டலம் போட்டு சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஒரே உற்சாகம் தான்.

அப்படியே சாப்பிடப்படும் இந்தப் பழத்திற்கு சமையலறையில் அவ்வளவாக வரவேற்பு இல்லாவிடினும், மேலை நாட்டினர் இதை மிட்டாய், ஊறுகாய் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதில் உபயோகிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை பொறுத்தவரை, நான் அறிந்த ஒரே தின்பண்டம் "இலந்தை வடை" தான். (வேறு பண்டங்கள் யாருக்காவது தெரிந்தால் பகிர்ந்துக் கொள்ளவும்). வெயிலில் காய வைத்தப் பழத்திலிருந்து கொட்டைகளை நீக்கி விட்டு, அத்துடன் கொஞ்சம் புளி, மிளகாய், வெல்லம், உப்பு சேர்த்து இடித்து, வடை போல் மெல்லியதாகத் தட்டி, மீண்டும் வெயிலில் காய வைத்து எடுத்து வைப்பார்கள். கிராமத்துக் கடைகளில் கிடைத்து வந்த இது, இப்பொழுது நகர அங்காடிகளிலும் கிடைக்கிறது.

மருத்துவ குணங்கள் நிறைந்த இது, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தக் கூடியது. வயிற்று வலி, தொண்டைப்புண், மலச்சிக்கல், குடற்புண் ஆகியவற்றை ஆற்றுப்படுத்த வல்லது.

காய்ந்தப் பழத்தைப் பொடி செய்து ஒரு டீஸ்பூன் உட்கொண்டால், பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு கட்டுபடும்.

என்னதான் மருத்துவ குணங்கள் இருந்தாலும், இது அனைவராலும் விரும்பி சாப்பிடப்படுவதில்லை. ஆனாலும், இதைப் பார்க்கும் பொழுது நிச்சயமாக அவர்கள் பள்ளிக்கூட நாட்கள் நினைவிற்கு வராமல் போகாது.

0 comments:

Leave a Reply

நிலாமுற்றம்

Advertisement